முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஜூன் மாதம் கவுன்சிலிங்- அண்ணா பல்கலைக்கழகம் தகவல்




 அண்ணா பல்கலைக்கழகம், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.


சுயநிதி கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆவதால் செப்டம்பர் மாதத்துக்கு மாணவர் சேர்க்கை தள்ளிப்போகிறது.


சென்னை: 

முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளில் சேருவதற்கு டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை என்று அழைக்கப்படும் 'சீட்டா' நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்தியது. இந்த தேர்வை 4 ஆயிரத்து 350 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவும் வெளியானது. ஐ.ஐ.டி., என்.ஐ.டி.களுக்கு இணையாக அண்ணா பல்கலைக்கழக துறைகள் முதுநிலை படிப்புகளை வழங்கி வருகின்றன. இருப்பினும் இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை (கவுன்சிலிங்) தாமதமாக நடத்தப்படுவதால், என்.ஐ.டி. மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர். இதனால் அண்ணா பல்கலைக்கழகம், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. 


மேலும் சுயநிதி கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆவதால் செப்டம்பர் மாதத்துக்கு மாணவர் சேர்க்கை தள்ளிப்போகிறது. இதற்கு ஒரு தீர்வாக இந்த ஆண்டு முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு இருப்பதாகவும், அதன்படி, வருகிற ஜூன் மாதத்தில் முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கான தனி கவுன்சிலிங் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Comments